விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Published on
Updated on
2 min read

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதையடுத்து, கடந்த 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணும் இடத்தில் , செல்லாத தபால் ஓட்டு குறித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தபால் வாக்குகளில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். பின்னர் அரைமணி நேரம் கழித்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

14 மேஜைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.

20-வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து, 24 ஆயிரத்து, 053 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

பாமக வேட்பாளர் சி. அன்புமணி, 56ஆயிரத்து, 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, 10 ஆயிரத்து, 602 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அத்துடன் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் 932 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தை பிடித்துள்ள நிலையில்,

859 வாக்குகளைப் பெற்று நோட்டா 5-வது இடத்தை பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், 67 ஆயிரத்து,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடியுடன் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழை திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்றுக் கொண்டார்.

இதனிடையே நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தனது டெபாசிட் தொகையை தக்கவைத்துக் கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com