கோவை மாநகராட்சியில் 97 வது வார்டுக்கு இடைத்தேர்தல்...? மேயர் பதவி கிடைக்காத விரக்தியில்...சிவில் சர்வீஸ் படிக்க சென்ற கவுன்சிலர்!

கோவை மாநகராட்சியில் 97 வது வார்டுக்கு இடைத்தேர்தல்...? மேயர் பதவி கிடைக்காத விரக்தியில்...சிவில் சர்வீஸ் படிக்க சென்ற கவுன்சிலர்!
Published on
Updated on
1 min read

கோவை மாநகராட்சியின் இளம் திமுக கவுன்சிலர் நிவேதா சேனாபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, கோவை மாநகராட்சிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

கோவை மாநகராட்சி 97 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்தவர் தான் நிவேதா சேனாதிபதி. 23 வயதாகும் இவர் கடந்தாண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலராக பதவி வகித்தார்.

ஆனால் நிவேதா சேனாபதிக்கு, தனது தந்தை மருதமலை சேனாதிபதி திமுக மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் அதனை பயன்படுத்தி மேயர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்தார். இருப்பினும், அவருக்கு மேயர் பதவி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி வார்டு மற்றும் மாமன்றம் கூட்டம் என எதிலும் கலந்து கொள்ளாமல்  ஆப்செண்ட் ஆகி வந்துள்ளார். இதற்கு காரணம் தேர்தல் முடிந்த சிறிது காலத்திலேயே நிவேதா சிவில் சர்வீஸ் படிக்க சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் மாமன்ற கூட்டங்களுக்கு தொடர்ந்து வருகை தராமல் இருந்ததால், மக்கள் தங்கள் பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது என்பது தெரியாமல் தவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களுக்கு தொடர்ந்து வருகை புரியாமல் இருப்பதால் மாநகராட்சி சட்டப்பிரிவு படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறும் போது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடைபெற்ற மூன்று மாமன்ற கூட்டங்களில் கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி கலந்து கொள்ளவில்லை. எனவே, மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32(1)ல் கூறுவது போல் 3 கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் சட்டப்பிரிவு 32(4) இல் தகுதி நீக்கத்தை மாமன்ற கூட்டம் தான் உறுதி செய்ய முடியும் என்று கூறுவதால், அடுத்த மாநகராட்சி கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து முடிவு தெரிவிக்கப்படும் என்றும், கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இல்லாவிட்டால் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com