அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த பிரியங்கா, இவ்வளவு நாட்கள் தேர்தலில் நிற்காதது ஏன்?

தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட காரணம் என்ன?
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த பிரியங்கா, இவ்வளவு நாட்கள் தேர்தலில் நிற்காதது ஏன்?
Published on
Updated on
3 min read

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நீண்ட நெடிய வரலாற்றுப் பக்கங்களில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை தவிர்த்து விடவே முடியாது.

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றது முதல் நேருவின் குடும்பம் ஆட்சியில் நீடித்து வந்தது. நேருவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் தலைவராக மாறினார் அவரது மகள் இந்திரா காந்தி.

இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு ராஜீவ்காந்தி, ராஜீவ்காந்திக்கு பிறகு சோனியா காந்தி என இந்திய காங்கிரஸ் கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராஜீவ்காந்திக்கு பிறகு சோனியா காந்தி ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்தார். அதே நேரம், மகன் ராகுல்காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியை அரசியலில் உச்சம் காண வைக்க பாடுபட்டார்.

அந்த வகையில் ராகுல்காந்தியின் வருகை இந்திய அரசியலில் மிகப்பெரிய அழுத்தத்தையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸின் காலூன்றலுக்கு ராகுல் காந்தியின் உழைப்புகள் இருந்தாலும் பிரியங்காவின் யுக்தி நிறைந்த பிரச்சாரங்களை தவிர்க்க முடியாது.

அரசியல் பின்னணி, அரசியல் குடும்பம் என பிறப்பிலிருந்து அரசியல் களத்தை கண்டு வளர்ந்த பிரியங்கா போட்டியில் பங்கேற்காமலே போராடினார். தனது 16வது வயதில் பொதுக்கூட்டத்தில் கர்ஜித்த குரல் இன்று வரை நீடிக்கிறது என்றால் அந்த குரலுக்கான தாக்கத்தைதான் விவரித்துள்ளது இந்த நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி.

1999-ம் ஆண்டு தாய் சோனியா காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடும் போது, பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு மக்கள் என்னை ஈர்த்த அளவுக்கு அரசியல் என்னை ஈர்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும் போட்டியிட்டபோது இரு தொகுதிகளிலும் பிரசாரத்தில் புயலாய் விளங்கினார் பிரியங்கா.

தான் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் பிரியங்கா அவரது அனல் கருத்துக்களை முன்வைப்பதனால் இந்தியாவின் இரும்பு பெண்மனி இந்திரா காந்தி மீண்டும் திரும்பியுள்ளார் என காங்கிரஸினர் பிரியங்காவை கொண்டாடினர்.

உதாரணத்திற்கு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவிற்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகவே விமர்சித்தார் பிரியங்கா. குறிப்பாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பிரியங்கா என் மகள் போல் என்று குறிப்பிடவே, நான் நாட்டிற்காக உயிர்நீத்த ராஜீவ்-வின் மகள் என்று மோடிக்கு பதிலடி கொடுத்தார்.

இவ்வாறு ஆளுமைமிக்க பேச்சுக்களால் இந்திய அரசியல் களத்தில் போட்டியிடாமல் நீடித்து வந்தார். 2019-ம் ஆண்டு அரசியலில் தீவிரமாக இறங்கிய பிரியங்காவுக்கு உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர் ராகுல்காந்தி ஒரு பக்கம் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு பெற்று வரும் போது, பிரியங்கா காந்தியும் கட்சி வேலைகளில் உழைத்து வந்தார்.

இந்நிலையில் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத பிரியங்கா, தற்போது நேரடியாக நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் களம் காண இருக்கிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ஆனால் இந்த இரண்டில் ஒரு தொகுதியில் ராகுல் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உண்டானது.

நாடே உற்று நோக்கிய நிலையில், ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்து காந்தி குடும்பத்தின் கோட்டையாக விளங்கும் ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

காந்தி குடும்பத்தினருக்கு ரேபரேலி எந்த அளவிற்கு முக்கியம் வாய்ந்தது அதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது வயநாடு. அதுவும் தென் மாநிலங்களில் எக்காரணத்திலும் காங்கிரஸ் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியிருந்தது. இந்த நிலையில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் பிரியங்கா காந்தியை வேட்பாளராக அறிவித்தது.

இதன்மூலம் காந்தி குடும்பத்தில் இருந்து தேர்தல் அரசியல் களம் காணும் 9வது தலைவரானார் பிரியங்கா. இதுகுறித்து பிரியங்கா காந்தி, வயநாட்டில் போட்டியிடுவதில் எந்த பதற்றமும் இல்லை என கூறினார். ராகுல்காந்தி ரேபரேலியை தேர்வு செய்தாலும், வயநாடு தொகுதி மக்களிடம் ராகுல் இல்லாத உணர்வை ஏற்படுத்த விடமாட்டேன் என கூறினார்.

பாரம்பரிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த பிரியங்கா, இத்தனை ஆண்டுகாலம் நேரடி தேர்தலில் இறங்காதது காங்கிரஸ் தொண்டர்களை சோகமடைய வைத்திருந்தது. ஆனால் தற்போது நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்திருப்பது காங்கிரசாரை உற்சாகமடைய வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com