மதுரையில் முக்கிய புள்ளியை களமிறக்க பாஜக திட்டம்?

மதுரையில் முக்கிய புள்ளியை களமிறக்க பாஜக திட்டம்?
Published on
Updated on
2 min read

ஒரு காலத்தில் மதுரையில் டானாக வலம் வந்த முக்கிய புள்ளியை களமிறக்க பாஜக திட்டம்?

இந்திய அளவில் பெரிய கட்சியாக வலம் வரும் பாஜக கடந்த சில வருடங்களில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியமைத்த நிலையில், தமிழ்நாட்டில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பல முக்கிய பிரபலங்களை கட்சிக்குள் இணைத்தாலும், ஒரு குறுநிலமன்னர் அதாவது அந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளிகளை கட்சிக்குள் இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரனை தவிர்த்து மாற்று கட்சியில் இருந்து கள அரசியல்வாதிகளை கட்சியில் இணைத்தது மிகவும் குறைவே, வி.பி.துரைசாமி மேல்மட்டத்திலே திமுகவில் பணியாற்றியதால் கள அரசியல் பாஜகவில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், பிரபலங்கள் வருகை என்பது அந்தந்த நேரத்திற்கான செய்தியே தவிர, அவர்களால் பெரிய மாற்றகளையெல்லாம் கொண்டுவர இயலாது என்பது பாஜகவிற்கே தெரியும்.  முன்னெடுப்புகள் மட்டுமே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து அண்ணாமலை யாத்திரையை தொடங்கியது குறிப்பிடதக்கது. 

2024 தேர்தலில் பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வரும் வேளையில் மதுரை முன்னாள் மேயரும் சட்டமன்ற உறுப்பினருமாக வலம் வந்த செ.ராமச்சந்திரனை பாஜகவில் இணைக்க வேலை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சி.ஆர் என்று அழைக்கப்படும் செ.ராமச்சந்திரன் மதுரையில் தனிப்பெரும் ஆளுமையாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர். 2005ல் ஒரு விபத்தில் சிக்கியது அவருடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியாக அமைந்து விட்டது. இதனால் முழுவதுமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். 1989 மற்றும்  1996 என இருமுறை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1991ல் பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் ஆண்டித்தேவரிடம் தோல்வியும் அடைந்தார். மதுரை முத்து, அக்கினிராசு, காவேரி மணியம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போல் மதுரையில் திமுகவை வளர்தெடுத்ததில் இவரின் பங்கு அளப்பறியது. 

சாதகம் - பாதகம்:

2019 ல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர் மூர்த்தி மீண்டும் சி.ஆர் -ஐ களமிறக்க முயற்சி செய்தார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திமுக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஊராட்சி சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி பொதுமக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டு வந்தார். மதுரை தனக்கன்குளம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் சி.ஆர் கலந்து கொண்டது மதுரை வட்டாரத்தில் பெரும்பரப்பரப்பாக பேசப்பட்டது. ஆனால் கடைசியில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டவில்லை. எம்.பி சீட் கேட்டதாகவும் ஆனால் மதுரை கம்யூனிஸ்ட்க்கு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் சைலண்ட் மோட் சென்றார்.

90களில் இருந்த அதே ஆதரவு வட்டம் தற்போது ராமச்சந்திரனுக்கு உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். மேலும் வயதும் அதிகமாகிவிட்டதால் அவரால் களத்தில் செயல்படுவதும் சற்று கடினமான ஒன்றே, ஆனால் இதை அனைத்தும் தெரிந்தும் அவரை பாஜக தற்போது அழைப்பு விடுக்கிறது என்றால், அது ஒரு  அலையை ஏற்படுத்தவே இந்த யுக்தி என்று எடுத்து கொள்ளலாம். சாதி பின்புலமும் பெரிதாக எதிரொலிக்காது. ஒரு காலத்தில் மதுரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பெரும்புள்ளி பாஜகவில் இணைந்துவிட்டார் என்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தவே, இந்த இணைப்பு அமையும். மதுரை நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் அதிமுக விட்டுக்கொடுக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு வேளை பாஜக தனித்து களம் காண முடிவு செய்தால் சி.ஆர் ஒரு கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, குறிப்பாக திமுக வாக்குகளை தனது வசமாக்க வாய்ப்புள்ளது. ஆனால் பாரம்பரியமாக திமுகவிலே பயணித்த சி.ஆர் எளிதில் மாற்று கட்சிக்கு செல்வாரா என்பது கேள்விக்குறியே.

- மா.நிருபன் சக்கரவர்த்தி

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com