7வது முறையாக ஆட்சி...2 வது முறையாக முதலமைச்சர்...கோட்டையை விடாத தாமரை...!

7வது முறையாக ஆட்சி...2 வது முறையாக முதலமைச்சர்...கோட்டையை விடாத தாமரை...!
Published on
Updated on
1 min read

2வது முறையாக குஜராத் முதலமைச்சரானார் பாஜகவைச் சேர்ந்த பூபேந்திர படேல்... 

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்:

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஏற்பட்ட கடுமையான போட்டியில் குஜராத்தை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வந்தது.

பெரும்பான்மையாக வெற்றி கண்ட பாஜக:

இந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பாஜகவின் கையே ஓங்கி இருந்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் ஓட்டுக்கள் பிரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 156 இடங்களைக் கைப்பற்றி பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜக, வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதில் காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இது காங்கிரஸ்க்கு ஏற்பட்ட பெரிய வீழ்ச்சியாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

7வது முறையாக ஆட்சி:

தொடர்ந்து குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 7வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கிறது. பாஜக வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த பூபேந்திர படேல் முதலமைச்சராக இன்று பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பு:

இந்நிலையில், குஜராத் காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்க பூபேந்திர படேல் 2வது முறையாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மாநில அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி ராணி, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களை தவிர தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ஜி.கே வாசன் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com