"வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி அபராதம்" நடைமுறை சாத்தியமா?

"வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி அபராதம்" நடைமுறை சாத்தியமா?
Published on
Updated on
2 min read

சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யும் புதிய முறையை சென்னை பெருநகர காவல்துறை கமிஷ்னர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, சென்னையில் பகலில் 40கி.மீ வேகத்தையும், இரவில் 50கி.மீ வேகத்தையும் கடந்து வாகனம் ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடு ரேடார் கண் தொழில் நுட்ப கருவி மூலம் தானியங்கி முறையில் வழக்குப் பதிவாகும் என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த புதிய வகையிலான வழக்கு பதியும் முறை சாத்தியமா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. 

ஏற்கனவே "சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு கூட வேகமாக சென்றதாக வழக்கு பதிவு செய்தல்" உள்ளிட்ட குற்றச் சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை சுமந்துள்ள நிலையில், இது போன்ற திட்டங்கள் மேலும் அதிருப்தியை சம்பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மறுபுறம் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்வது எந்த அளவிற்கு முழுமையாக சாத்தியமானவை என்பதும், இவற்றின் துல்லியத் தன்மையும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. 

சில காலத்திற்கு முன்னர் சிக்னலை தாண்டினால் வழக்கு பதிவு செய்வதற்கு தானியங்கி தொழில்நுட்பத்தை காவல்துறை அறிமுகப் படுத்தியது. ஆனால் அதை நடைமுறை படுத்தியதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.  இதில் வழக்கு பதியப்பட்ட பலரும் சிசிடிவி ஆதாரத்துடன் அதற்கு எதிராக முறையிட்டதால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது. பின்னர், அந்த திட்டமே இல்லாமல் போய்விட்டது. இப்போது அந்த இடத்தை கிட்டத்திட்ட இட்டு நிரப்ப வந்ததாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

இதுபோல பெண்களின் பாதுகாப்பிற்கு என காவலன் செயலியை தமிழ்நாடு காவல்துறை கொண்டுவந்தது. மூன்று முறை செல்போனை குலுக்கினால் போலீஸ் வரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு கட்சியின் பெண்தலைவர் அந்த செயலியின் நிர்வாக குறைபாட்டை அப்பட்டமாக வெளிக்காட்டினார். 

சென்னை உள்ளிட்ட பெருநகர பேருந்துகளில் வைக்கப்பட்ட தானியங்கி கதவுகள் பல பேருந்துகளில் செயல்படுவதே இல்லை. நெரிசலில் சிக்கும் பயணிகளுக்கு போதிய பேருந்துகளை வாங்குவதற்கு பதில் இதுபோன்ற தானியங்கி கதவுகளுக்கு செலவு செய்வது பயணிகளால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பேருந்துகளில் இயந்திர முறையில் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட்டுகள் வழங்கும் திட்டம் சென்னையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மலையேறிப்போனது. டிஜிட்டல் போர்டுகள் கூட மீண்டும் சாதாரண போர்டுகளால் இடமாற்றம் செய்யப்படுகின்றன. போக்குவரத்து துறை மட்டுமின்றி இன்னும் பல துறைகளிலும் இதுபோன்று பொருந்திப்போகாமல் காலாவதியான பல அட்வான்ஸ் திட்டங்கள் உண்டு. இவற்றை புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துபவர்களும்  நினைவில் கொண்டால் மக்கள் பணம் வீண் விரையமாவது தடுக்கப்படலாம்.      
 
அவசரமே வாழ்வாகிவிட்ட இன்றைய நாளில் ஒருவர் 40 கிமீ வேகத்தில் சென்றால் அவர் அலுவலக்த்திற்கோ அல்லது மற்ற பணிகளுக்கோ உரிய நேரத்தில் சென்றடைய முடியுமா? என்ற கேளவியும் இங்கு எழத்தான் செய்கிறது. பொது போக்குவரத்துகள் உரிய நேரத்தை கடைபிடிக்காதது, நெரிசலுக்கு ஏற்றால் போல் போக்குவரத்தை அதிகபடுத்துதாதது போன்ற தோல்விகள் தான் பலர் இருசக்கர வாகனங்கனை வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளின. ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் மற்ற இடத்தில் அதனை சரிசெய்ய முயலும் போது வேகம் அதிகரிக்கிறது. 

ஆனால், சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்களை எடுப்பதில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற விடயங்களில் காவல்துறை கவனம் செலுத்துவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துகள் வருகின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com