ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை, ஆறுமுகசாமி ஆணையம் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை நடத்திய ஆணையம்:
இந்த ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது.
ஆணையத்தின் மீது வழக்கு:
இந்நிலையில், ஆணையத்தின் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை, உச்ச நீதிமன்றத்தை நாடியது. அங்கு, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் விசாரணை ஆணையம் சுமார் 2 வருடங்கள் முடங்கிவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு:
இதனையடுத்து, இந்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவ முழு அமைத்து ஆணையம் தன்னுடைய விசாரணையை தொடங்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைத்து தனது விசாரணையை தொடங்கியது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். தொடர்ந்து, இந்த விசாரணையானது நிறைவு பெற்றுவிட்டதாக ஆணையம் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை தாக்கல்:
இதன் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஆணையம் தீவிரம் காட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவக்குழு தந்து அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதி அறிக்கை தயார்:
இந்த நிலையில், ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2017-ல் செப்டம்பரில் அமைக்கப்பட்டு கிட்டதட்ட 5 வருடங்கள் விசாரணைக்கு பிறகு, எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்தது.
முன்னதாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆணையத்துக்கு 14 முறை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று தாக்கல்:
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சுமார் 600 பக்கம் கொண்ட அறிக்கையை இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்தார்.
அறிக்கையின் எதிர்பார்ப்பு:
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியதையடுத்து, அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டதால், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை எவ்வாறு அமைந்திருக்கும்? எப்படிபட்ட அறிக்கையை அவர் தாக்கல் செய்திருப்பார்? என்ற எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.