65 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல், பலகார மனம் வீசாமல், புத்தாடை அணியாமல் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது எஸ்.மாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை தாய் கிராமமாக கொண்ட இந்த மக்கள், விளாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, அச்சம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா ?
காரணம், 1954-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில், கடன்பட்டு தீபாவளி கொண்டாடியதால், நெல் அறுவடைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், தீபாவளிக்கு பெற்ற கடனை அடைக்க முடியாமலும் விழி பிதுங்கி நின்றுள்ளனர். அன்று இந்த மக்கள் மனோதிடத்துடன் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இல்லை என்பதுதான் அது.
மேலும், உழைப்பின் உயர்வை உணர்த்தும் உன்னத திருநாளான பொங்கல் பண்டிகையை மட்டும் சீரும்சிறப்புமாக கொண்டாடுவது என ஊர் பெரியவர்கள் அப்போது முடிவெடுத்தனர். அதுநாள் முதல் இந்த கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை புறந்தள்ளி வருகின்றனர்.
இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!
இனிவரும் காலங்களில் எவ்வளவு பெரிய நிலைக்கு சென்றாலும், தங்களின் முன்னோர்கள் எதிர்கொண்ட வறுமையின் கொடுமையை மனதில் வைத்து எதார்த்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்துள்ளனர்.
ஒருபுறம் உயர் ரக பட்சணம், சிக்கன் மட்டனுடன் கூடிய சிறப்பு விருந்து, விலை உயர்ந்த ஆடைகள், பட்டாசு என நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறாம். ஆனால், மறுபுறம் இந்த மக்கள் தீபாவளி பண்டிகைக்கான எந்தவித ஆரவாரமின்றி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய காலத்திற்கு ஏற்ப வெளிநாடுகளுக்கு சென்றாலும் கூட, ஊர் கட்டுப்பாடு மற்றும் முன்னோர்களின் வாழ்வியலை மனதில் வைத்து, விளைநிலம், வயல்வெளி, விவசாயம், மரம், செடி, கொடி என அனைத்தையும் இளம் தலைமுறையினர் கடைப்பிடித்து வருவது வியப்பிலும் வியப்புதான்...