” என்றும் நினைவில் நீங்கள்...” ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுதினம் இன்று!!

” என்றும் நினைவில் நீங்கள்...”  ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுதினம் இன்று!!
Published on
Updated on
2 min read

தமிழ் பத்திரிகையுலகம் கண்ட தலைமகன்… சி.பா. ஆதித்தனார்… அவரின் அற்புத தலைமகனாய் அவதரித்தவர் தான் ராமச்சந்திர ஆதித்தனார்…

காயாமொழி தந்த, ஈரம் காயாத மனதுக்கு சொந்தக்காரரான ராமச்சந்திர ஆதித்தனாரின்  9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

தலைநிமிர்ந்து...:

இந்திய விடுதலைக்கு முன்னரே 1934 ஆகஸ்ட் 11-ல் பிறந்தவர் ராமச்சந்திர ஆதித்தனார்.  சுதந்திரத்திற்கு முன்னர் பிறந்ததாலேயே என்னவோ, தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதை உணர்வோடும், இனமான கொள்கையோடும் தலைநிமிர்ந்து வாழ்ந்தார். 

பயிற்சி பட்டறை:

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற தமிழின் முதுமொழிக்கு ஏற்ப சி.பா.ஆதித்தனாரின் பட்டறையில் பத்திரிகை பயிற்சி எடுத்தார். எது மக்களுக்கான செய்தி, எது மக்களுக்கான தேவை என்பதை நன்குணர்ந்து செய்திகளை வெளியிட்டதால் அப்பாவுக்கு தப்பாத பிள்ளை என்ற பேரெடுத்தார்.

வள்ளன்மையாளர்:

அதேசமயம், அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட தன் அறிவாற்றலையும், அவர்களின் கவலைகள் தீர தன் சொத்துக்களையும் வாரி வழங்கியவர். அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்கு சொந்தக்காரர் ஐயா ராமச்சந்திர ஆதித்தனார்.

மாலை முரசு எனும் ஆயுதம்:

தமிழ் மொழியின் மீது தீராத பற்றும், நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாலை முரசு பத்திரிகையை முழுமையாக பயன்படுத்தியவர் ராமச்சந்திர ஆதித்தனார்.

தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். தமிழ் ஈழ விடுதலை உணர்வை கொண்டிருந்ததால், இனமான உணர்வு அவர் ரத்தத்தில் எப்போதும் நிறைந்திருந்தது.

மாலைமுரசு பத்திரிகையில் தங்கள் செய்தி வராதா? புகைப்படம் இடம்பெறாதா? என்று அரசியல்வாதிகளையும், திரையுலக பிரபலங்களையும் ஏங்க வைத்த பெருமைக்கு உரியவர் ராமச்சந்திர ஆதித்தனார். 

தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகள் அனைத்திற்கும் ரத்த சாட்சியாய் நின்றது மாலை முரசு. 

கதிரவன்:

ஒட்டுமொத்த உலகிற்கே ஒளியூட்டும் அந்த கதிரவனைப் போன்று தமிழ் நாளிதழ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிதழ் என்றால் அது கதிரவன் தான்.  சென்னையிலும், நெல்லையிலும் கதிரவன் நாளிதழை தொடங்கிய பெருமை ஐயா ராமச்சந்திர ஆதித்தனாருக்கு உண்டு. 

அப்பப்பா அந்த காலகட்டத்தில் கதிரவன் ஏற்படுத்திய தாக்கம், இன்றைய சமூக வலைதள வைரல் வீடியோக்களுக்கு எல்லாம் முன்னோடி.

தேவி வார இதழ்:

தனக்கென தனி முத்திரை பதிக்க தேவி வார இதழை உருவாக்கினார். அழகே வடிவாக கண்மணி என்ற இதழையும், பெண்மணி இதழையும் அறிமுகப்படுத்தினார். இடஒதுக்கீட்டு கொள்கையை பத்திரிகைக்கு பெயர் சூட்டுவதிலும் பின்பற்றிய நவயுக போராளி ஐயா ராமச்சந்திர ஆதித்தனார்.

சமரசம் இல்லா நடுநிலையாளர்:

தமிழக அரசியல் களத்தின் ஜாம்பவான்களான கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுகவின் வைகோ, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் – பாஜக கட்சியினர் என அத்தனை தலைவர்களிடம் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தார்.

அதேசமயம் செய்திகளில் ஒருநாளும் சமரசம் செய்து கொள்ளாத நடுநிலையாளர் ஐயா ராமச்சந்திர ஆதித்தனார்..

மீட்பு போராட்டம்:

இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தார்போல் அவர் ஆற்றிய பங்கு ஒன்று உண்டு.  அதுதான் மெர்க்கைன்டல் வங்கி மீட்பு போராட்டம்.  நாடார் இன மக்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கைண்டல் வங்கி, நடுவில் சிலகாலம் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த எஸ்ஸார் குழுமத்தின் ஆதிக்கத்திற்கு சென்றது. அதனை பெரும்போராட்டம் நடத்தி மீட்டதில் முக்கிய பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தனார்..  

ஆளுமைக்கு அங்கீகாரம்:

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, தான் வாழ்ந்து நடமாடி முத்திரை பதித்த அடையாறு காந்தி நகர் சாலைக்கு ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.   சமகால ஆளுமைக்கு தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம் அது. 

என்றும் நினைவில்...:

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி பத்திரிகை உலகில் முன்னத்தி ஏராய் இருந்த ஐயா, தமது 79-வது வயதில் 2013 அக்டோபர் 16ல் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.  9-ம் ஆண்டு நினைவுதினம் இன்று.  மறந்தால் தானே நினைப்பதற்கு.  நெஞ்சில் நிறைந்து வாழும் வழிகாட்டி, ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவை போற்றுவோம்.

                                                                                        -நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com