பாஜகவிடம் விலைபோய் விட்டனரா...ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிரம்:
டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கவும் ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது.
சிபிஐ சோதனை:
இந்நிலையில், கடந்த வாரம் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ சோதனை தொடங்கியது.
20கோடி பேரம் பேசிய பாஜக:
சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை தொடங்கியதும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பாஜக பேரம் பேசி வருவதாக தகவல் வெளியானது. ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் விலைக்கு வாங்க பாஜக 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
இதனையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டினார். ஆனால், அந்த கூட்டத்தில் 54 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
மீதமுள்ள 8 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இது குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், அவர்கள் தொலைபேசி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக காரணம் கூறினார்.
மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்:
இந்த் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. கூட பாஜகவின் வாய்ப்பை ஏற்கவில்லை என்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இறக்க வேண்டிய நிலை வந்தாலும், பாஜகவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் போலி நாடகத்தை புறக்கணித்த சிசோடியா, தன்னுடன் இருப்பது தனது அதிர்ஷ்டம் எனவும் அவர் மனம் திறந்து பேசினார்.
சந்தேகம்:
பாஜக ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வியூகத்தை செயல்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், பீகாரை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் காட்டி வருகிறது. அதன்படி, வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தீவிரம் காட்டி வரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை தனது பக்கம் சாய்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் 20 கோடி பேரம் பேசி வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை 8 பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற கூட்டத்தில் 54 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர். 8 பேர் பங்கேற்கவில்லை என்பதால் அவர்கள் பாஜகவிடம் விலைபோய் விட்டனரா? பாஜக்வின் ரூ.20 கோடி சூட்சமம் வெற்றியா? தோல்வியா? என்ற கேள்விகள் அரசியல் வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.