சிறு குச்சியையே ஆயுதமாக வைத்துக் கொண்டு, 15 ஆயிரம் பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார் சிர்காழியை சேர்ந்த இயற்கை விவசாய இளைஞர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இயற்கை விவசாயியான இவர், பகுதி நேர பணியாக கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட தமிழர்களின் மரபுக் கலைகளை பயிற்றுவித்து வருகிறார்.
இவர் தனது ஐந்து வயது முதல் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடும் சேவையையும் செய்து வருகிறார்.
இவரது வயலில் விவசாய பணிகள் நடைபெறும் போது அப்பகுதியில் தென்படும் பாம்புகளைக் கண்டு தொழிலாளர்கள் பணியை விட்டு கரையேறுவது தொடர்கதையாக இருந்து வந்தது.
சிறு வயதில் விளையாட்டாக சாதாரண குச்சியை வைத்து பாம்புகளை அப்புறப்படுத்த தொடங்கிய சேவை தற்போது வரை ஒற்றை குச்சியை மட்டுமே கொண்டு தொடர்ந்து பாம்புகளை மீட்டு, வனப்பகுதிக்கு அனுப்பி விடுகிறார்.
அவரது வயலில் விளையாட்டாக தொடங்கிய பாம்பு பிடிக்கும் பணி, அடுத்தடுத்த தெருக்கள், அடுத்த ஊர்கள் என தற்போது அடுத்த மாவட்டங்கள் வரை சென்று பாம்பு பிடிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
சாதாரண தண்ணிப் பாம்பு தொடங்கி சாரை பாம்பு, கொம்பேறி மூக்கன், கண்ணாடி விரியன், கருநாகம், நல்ல பாம்பு என கொடூர விஷமுடைய 15 ஆயிரம் பாம்புகளை லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விட்டுள்ளார்.
இரவு பகல் எந்த நேரமாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் சென்று பாம்புகளுக்கு எந்த தீங்கும் நேராத வகையில் அவற்றை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி வருகிறார்.
பாம்புகள் மட்டுமின்றி, ஆபத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உதவி செய்து வரும் தினேஷ்குமார், இந்த சேவை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.
மனிதர்களால் பாம்புகளுக்கோ அல்லது பாம்புகளால் மனிதர்களுக்கோ எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால் பாம்புகளை மீட்கும் பணியை தொய்வின்றி செய்துவருவதாக தெரிவிக்கும் தினேஷ்குமார் ஒரே நாளில் 60 பாம்புகளை கூட மீட்டுள்ளதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்.
இவரின் சேவையை அறிந்த வனத்துறையினர், இவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், பாதுகாப்புடன் பாம்புகளை கையாளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்களிடமிருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பாம்புகளின் விஷத் தன்மையை நம்மால் கணிக்க முடியாது என்பதால், தன்னை பார்த்து, யாரும் இந்த பணியை முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார் தினேஷ்குமார்.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கொடூர விஷம் படைத்த பாம்புகளும், தினேஷ்குமாரைக் கண்டால் பொட்டிப்பாம்பாக மாறி, பாட்டிலுக்குள் அடைபடுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
பாசத்துடன் பழகினால் எந்த ஒரு உயிரினமும் நம்மை துன்புறுத்துவதில்லை என்பதற்கு தினேஷ்குமார் ஒரு சிறந்த உதாரணம் என்றே சொல்ல வேண்டும்.