குழந்தைகளை தாக்கும் கொரோனாவின் மூன்றாம் அலை,.. பெற்றோர் செய்யவேண்டியது என்ன.? ஆலோசனை கூறும் மருத்துவர்.! 

குழந்தைகளை தாக்கும் கொரோனாவின் மூன்றாம் அலை,.. பெற்றோர் செய்யவேண்டியது என்ன.? ஆலோசனை கூறும் மருத்துவர்.! 

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரசின் முதல் அலையை காட்டிலும், 2வது அலையில் மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பலர் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இணை நோய் இல்லாதவர்களும், இளைஞர்களும் ஆவர். இந்தியாவில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. 

இதில் குறிப்பிட்ட சிலருக்கு தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக ஒவ்வாமையும் ஏற்பட்டது. இதனால் அந்த தடுப்பூசியானது சிறுவர்களின் பயன்பாட்டுக்கு இன்னும் வராமல் உள்ளது.  இந்த 2வது அலையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கென இன்னும் பிரத்யேக தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட வில்லை. 

இந்தநிலையில், இந்தியாவில் 3வது அலை இன்னும் சில மாதங்களில் பரவ  வாய்ப்பிருப்பதாகவும், இதில் குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாக தான் இருக்கும் எனவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனால் அடுத்த பரவ உள்ள அலையிலிருந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றன. கோவிட்-19 குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு என தனியே வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்த சூழலில், குழந்தைகளை தொற்று பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்களது மனநிலை பாதிக்காதவாறு பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பிரவீன் சுமன் ஆலோசனை வழங்கி உள்ளார். 

அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை பாதிப்பு இருக்கக்கூடும். தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் உடலில் காணப்படும் அறிகுறிகளை பெற்றோர் உன்னிப்பாக கவனித்து, மருத்துவர்களிடம் அறிவுரை பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு 2-6 வாரங்களுக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதனால் அவர்களுக்கு மல்டி சிஸ்டம் இன்ஃபளமேட்டரி என்று சொல்லக்கூடிய உடற்பாகங்கள் பல தொற்று பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கலாம். அதாவது தொற்றின் காரணமாக இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம், தோல் உள்ளிட்டவை பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளார். 

இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடு விதிகளை குழந்தைகள் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அவ்வப்போது காய்ச்சல் அளவை கண்காணிப்பது, மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் தொற்று சரியாகும் வரை அவர்களை தனிமையில் வைத்து கண்காணிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாது, தீவிர தொற்று பாதிப்பான அறிகுறிகளாக அதிகப்படியான காய்ச்சல், வாந்தி, வயிற்று கோளாறு தென்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை வழங்குவது, குறிப்பாக புரதச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல் அதிக நேரம் தூங்க வைப்பது, திரவ உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இதனால் அவர்களது மனநலம் பாதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார் மருத்துவர்.