“பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

“பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்”  -  அமைச்சர் மனோ தங்கராஜ்
Published on
Updated on
1 min read

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி அரசு பள்ளியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இணைந்து கட்டிக் கொடுத்துள்ள கழிவறைகளை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார் .

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும் போது, படிக்கும் வயதில் மாணவர்கள் இதுபோன்ற சமூக சிந்தனைகளுடன் ஈடுபடுவது மிகவும் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில்,..

“தமிழ்நாட்டில் 11,000 பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் 4 மண்டலங்களாக பிரித்து தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை எவ்வாறு புனரமைப்பது, விவசாயிகளை எவ்வாறு அணுகுவது என்பது உள்பட மூன்று கட்ட பயிற்சி நடக்க இருக்கிறது. ஏற்கனவே பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் கூடுதலாக பத்தாயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.

ஆவினைப் பொருத்தவரை சிறந்த கட்டமைப்பு கொண்டதாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதில் தவறில்லை விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

விடுதலைக்கு முன் நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, பிளவுபடுத்தி வைத்திருந்த கூட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கவர்னர் நாட்டின் விடுதலை தொடர்பாக இப்போது பேசி வருகிறார். அவருக்கு மனித விடுதலை குறித்து பேச எந்த உரிமையும் கிடையாது” .

இவ்வாறு அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com