கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்த பிறகு காங்கிரஸ் அளித்த 5 தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்று காலை பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தலைவர்களும் எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 5 திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய உடன் சபாநாயகர் யூ டி காதர் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது குருகிட்டு பேசிய பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கேள்வி பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, பாஜக கொண்டுவரும் ஒத்திவைப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்த வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சபாநாயகர் அதை ஏற்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவகுமார் இருவரும் பாஜக கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் மீது பதில் அளித்துள்ளனர்.
அதன் பிறகும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அதை ஏற்காமல் அவையின் மத்திய பகுதியில் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையின் மைய பகுதியில் கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.