FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில், நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
நெதர்லாந்து VS அமெரிக்கா:
22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்று முதல் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில், நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நெதர்லாந்து அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தியது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 76-வது நிமிடத்தில் அமெரிக்க ஒரு கோல் அடித்தது. ஆனால், அதன் பின் அமெரிக்காவின் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நெதர்லாந்து அணி ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம், காலிறுதிக்கு முதல் அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றது.
இதையும் படிக்க: பாஜக VS காங்கிரஸ் VS ஆம் ஆத்மி: முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்...சூடுபிடிக்க போகும் அரசியல் களம்!
அர்ஜென்டினா VS ஆஸ்திரேலியா:
நள்ளிரவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து இரண்டாம் பாதியில், 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினா இன்னொரு கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றது.
அர்ஜென்டினா VS நெதர்லாந்து:
இதைத்தொடர்ந்து, வருகிற 9-ம் தேதி நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி - நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதற்கு முன்னர், இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடப்பு சாம்பியான பிரான்ஸ் அணி - போலந்தையும், இங்கிலாந்து அணி - செனகல்லையும் எதிர்கொள்ள உள்ளதால் அடுத்து எந்த அணி காலிறுதி சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே வட்டமடித்து வருகிறது.