பாட்டியால் கிடைத்த வாய்ப்பு
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கால்பந்து வீரர் லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி, 1987ம் ஆண்டு அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்தவர். கால் பந்து விளையாட ஆர்வம் இருந்தும் தோற்றத்தில் குள்ளமாக இருந்ததால், அவரை எந்த பயிற்சியாளரும் சேர்த்து கொள்ள வில்லை. இதனை கண்ட அவரது பாட்டி செலியா பயிற்சியாளரிடம் கெஞ்சி, கூத்தாடி விளையாட்டில் சேர்க்க வைத்தார்.
மெஸ்ஸியின் காலுக்கு பந்து வந்த போது, எதிரணி சிறுவர்களை கடந்து அசால்டாக மெஸ்ஸி கோல் அடித்ததை பார்த்து பயிற்சியாளர் மிரண்டே போனார் . ஷூ வாங்க தர யாரும் முன் வாரத நிலையில் உறவினரிடம், பாட்டி சண்டை போட்டு ஷூ வாங்கி கொடுத்தார்.
உதவிக்கரம் நீட்டிய பார்சிலோனா
மெஸ்ஸியின் வளர்ச்சிக்கு தடைபோடும் வகையில் ஹார்மோன் குறைபாட்டால், அவர் வளர்வது கடினம் என மருத்துவர்கள் கூறினர். மெஸ்ஸியின் திறமையை அறிந்து, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப், அவரது மருத்துவ செலவினை ஏற்க முன்வந்தது.
மெஸ்ஸியின் முதல் கோல்
இதனால் 2004-05 சீசனின் போது, பார்சிலோனா அணியில் அறிமுகமான அவர், எஸ்பான்யோல் அணிக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார். களத்தில் மேஜிக் நடப்பது வழக்கமானது தான், ஆனால் மெஸ்ஸியின் மேஜிக், காண்போரை மெய்மறக்க செய்தது. ஒவ்வொரு கோலையும் அடிக்கும் போதும் மெஸ்ஸி அவரது பாட்டிக்காக டெடிகேட் செய்யும் வகையில் இருகைகளையும் வானத்தை நோக்கி கும்பிடுவார்.
ஆஸ்தான ஹீரோ மரடோனா
ஜாம்பவான் என்று கொண்டாடப்படும் மெஸ்ஸியின் வாழ்க்கையில், உலகக்கோப்பை என்னும் கனவு மட்டும் கைகூடாமலேயே இருந்தது. தனது ஆஸ்தான ஹீரோவான மரடோனாவுடன் கைகோர்த்து வந்தும் மெஸ்ஸியால் அர்ஜென்டினா அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.
கை சேர்ந்த கனவு
2014ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் ஓய்வையே அறிவித்தார். ஆனால் காலம் மெஸ்ஸியை அவ்வளவு எளிதாக விடவில்லை. மெஸ்ஸி என்னும் மேஜிக் மீண்டும் இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினார். 35 வயதிலும் கனவை எட்டிபிடிக்க அவர் நடத்திய போராட்டம் 2022 உலக கோப்பையை அவர் கையில் கொடுத்தது.
தொடரும் GOAT -ன் பயணம்
இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமது பயணம் தொடரும் என்று கூறியிருப்பது சற்று ஆறுதலாகவே இருக்கிறது. நாட்டின் 36 ஆண்டு கால நாயகனின் கனவை விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே நினைவாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. தொடர் தோல்விகளை சந்தித்த மேஜிக் நாயகனின் வெற்றி பயணம் இனிதே தொடரட்டும்.. வாழ்த்துகள் டியர் லியோனல் மெஸ்ஸி..!