விளையாட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கத்தில் சதமடித்த இந்தியா...!

Tamil Selvi Selvakumar

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 100 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா சதம் அடித்துள்ளது. இன்று நடைபெற்ற போட்டிகளில், தங்க வேட்டையுடன் இந்தியா தொடங்கிய நிலையில், கபடிப் போட்டியில் நமது வீராங்கனைகள், சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியாவிற்கு 100-ஆவது பதக்கமாக, தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில், தொடக்கம் முதலே நமது வீரர் - வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகின்றனர். இதனால், பதக்கப் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

இன்றைய வில்வித்தை போட்டியில் இந்தியா வீராங்கனை ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். இவர் தென்கொரிய வீராங்கனையை 149-க்கு 145 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

தனி நபர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, அதிதி கோபிச்சந்த் சுவாமி தன் பங்கிற்கு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் ஓஜஸ் பிரவீன் தங்கப் பதக்கத்தையும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

இதேபோல், மிகவும் விறுவிறுப்பாக கபடி போட்டியின் மகளிர் பிரிவில், சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர். இதனிடையே, ஆசிய விளையாட்டு தொடரில் 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது.