விளையாட்டு

ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!

Tamil Selvi Selvakumar

ஆசிய விளையாட்டு போட்டியின் 10 வது நாளில் இந்திய அணி 3 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. 
 
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியின் 10 வது நாளில் நடைபெற்ற 4 பேர் பங்கேற்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றது. அதேபோல், மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

தடகளத்தில் மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப்பதக்கமும், பிரீதி லம்பா வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். மகளிர் டேபிள் டென்னிஸ்,  ஸ்பீட் ஸ்கேட்டிங்க், ரோலர் ஸ்கேட்டிங் ஆடவர் மற்றும் மகளிர் உள்ளிட்ட போட்டிகளில்  இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

இதுவரை இந்திய அணி 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என 60 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4ஆம் இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக ஆடவர் ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.