உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மொரோக்கோவை வீழ்த்தியது குரோஷியா அணி. மேலும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
22 - வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் இந்த கால்பந்து போட்டியில் பங்கேற்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் பலப் பரீட்சையில் ஈடுபட்டன. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது. அந்த அணியின் சார்பில் ஜோஸ்கோ வார்டியோல், மிஸ்லாவ் ஓர்சிக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் மொரோக்கோ அணி 4வது இடத்தை பிடித்தது.
இதனிடையே உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான பிரான்சு மற்றும் அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இறுதி ஆட்டமானது லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இரவு 08.30 மணிக்கு ஆட்டம் நடைபெற உள்ளது.