இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை ஐபிஎல் சாம்பியனாக்கிய தோனி, மீண்டும் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாத் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். அடுத்த சீசனிலும் விளையாடுவேன் என்று இந்த ஆண்டு ஐபிஎல் கடைசி போட்டிக்குப் பிறகு தோனி கூறியிருந்தார். கடந்த சீசன் தொடங்கும் முன் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜடேஜா 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தோனி மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் அந்த அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஐபிஎல் தொடரை வென்றுள்ளது.
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடைசி போட்டிக்கு முன் டாஸ் போடும் போது வர்ணனையாளர் இயான் பிஷான் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என தோனியிடம் கேட்டபோது தோனி, “கண்டிப்பாக விளையாடுவேன், ஏனென்றால் சென்னையை வேண்டாம் என்று சொல்வது நியாயமற்றது. சேப்பாக்கத்தில் நான் விளையாடாதது சென்னை ரசிகர்களுக்கு நல்லதாக இருக்காது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இது பல்வேறு இடங்களில் உள்ள ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பை வழங்கும்” என்று கூறியுள்ளார்.
தோனி மேலும் கூறுகையில், “ரசிகர்களிடம் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி சொல்வது போல் இருக்கும். இருப்பினும், இது எனது கடைசி சீசனாக இருக்குமோ இல்லையோ, எதையும் கூறுவது இயலாதது. அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வர நிச்சயம் கடினமாக உழைப்பேன்” என்று கூறியுள்ளார்.
-நப்பசலையார்