விளையாட்டு

உலகக்கோப்பையை ஒட்டி களைக்கட்டியுள்ள சேப்பாக்கம்..!

Malaimurasu Seithigal TV

சென்னையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதையொட்டி சேப்பாக்கம் மைதானம் களைக்கட்டி உள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தி, பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

அதேபோல் ரசிகர்கள் வசதிக்காக இன்று சேப்பாக்கம் மைதானம் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மெட்ரோ நிர்வாகத்துடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போட்டியை ஒட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.