விளையாட்டு

விசில் போடு...10 வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி...!

Tamil Selvi Selvakumar

ஐபிஎல் கிாிக்கெட் தொடாில் குஜராத்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி 10-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயும், கெய்க்வாட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து வந்த ஷிவம் துபே, ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்ததால் சென்னை அணியின் ரன் வேகம் சற்று தணிந்தது. முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா 8 ரன்களும், தசுன் ஷனகா 17 ரன்களும், டேவிட் மில்லர் 4 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திவாட்டியா 3 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து விஜய் சங்கரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நல்கண்டே ரன் அவுட் ஆகி வந்த வேகத்திலே வெளியேறினார். இறுதியில் குஜராத் அணி 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்படி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளது.