ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் 'ஏர் பிஸ்டல்' துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய விரர்கள்
அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு 'வுஷூ' போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு குதிரையேற்ற போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 73 புள்ளி 30 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். குதிரையேற்றம் போட்டியில் இந்த அணி ஏற்கனவே தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சவுதி அரேபிய வீராங்கனை ஹதீல் கஸ்வானை வீழ்த்தினார். மேலும், 71 கிலோ எடைப்பிரிவில் வியட்நாம் வீரர் பிடி புய்யை தோற்கடித்து இந்தியாவின் நிஷாந்த் தேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபன்னா, ருதுஜா போசலே இணை கஜகஸ்தான் நாட்டின் க்ரிகோரி லோமகின் மற்றும் ஜிபேக் குலம்பயேவா இணையை எதிர்கொண்டது. இதில் 7-5,6-3 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஒருபதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேபிள் டென்னிசில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீரர்கள் மானவ் விகாஷ் - மனுஷ் ஷா இணை 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு இணையை வென்றனர்.
இதே போல் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில், நேபாள வீராங்கனை நபிதா ஷ்ரேஸ்தாவை 4-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, தோற்கடித்தார்.
ஆடவர் ஹாக்கி போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் ஜப்பானும் மோதின. இதில் 4-2 என்ற கணக்கில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தியது.
பதக்கப் பட்டியலில் 85 தங்கம் உட்பட 160 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 21 தங்கம் உட்பட 79 பதக்கங்களுடன் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!