திருத்தலங்கள்

அபூர்வ சக்தி நிறைந்த அரைக்காசு அம்மன்.

Nanda Kumar (நந்த குமார்)

அன்பு நேயர்களே இன்றைய மணியோசை நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்து செல்லும் ஆலயம் ஓர் அபூர்வ சக்தி நிறைந்த ஆலயம் ஆகும்

அரசன் முதல் ஆண்டி வரையிலானவர்களூக்கு அருளை வாரி வழங்கிய திருக்கோவிலுக்கு உங்களை அழைத்து செல்வதில் பெருமை கொள்கிறோம்

மனித வாழ்வின் எண்ணற்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் திருக்கோயிலின் மகிமைகளை தெரிந்து நாமும் தரிசிப்போம் வாருங்கள்

தொலைந்து போன மனிதர்கள், பிரிந்து போன உறவுகள்,இழந்து போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா

உங்கள் கவலைகளை தீர்த்து, இழந்ததை அனைத்தையும் மீட்டு தருவாள் அன்னை அரைக்காசு அம்மன்

கோடானகோடி பக்தர்களின் கவலையை தீர்த்து அருளுகிறாள் அரைக்காசு அம்மன்

ஆச்சரியமாக இருக்கிறதா, கூட்டம் கூட்டமாய் இக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைதான் அதற்கு சாட்சி

அரைக்காசு அம்மன், தரும் அற்புதங்களை காணாலாம், கண்டுதரிசிக்கலாம் வாருங்கள் .

புதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி பாருங்களேன். நீங்கள் தொலைத்த பொருள் நிச்சயம் உங்கள் கை தேடி வரும், இது சாத்தியமில்லாதது என்ற அவநம்பிக்கை வேண்டாம், சத்தியமான பக்தியோடு வணங்கினால் சகலமும் நடக்குமாம்

புதுக்கோட்டை மையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் திருகோகர்ணத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரபலமான சமஸ்தானமான புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்குபவள் அன்னை பிரகதாம்பாள்!

திருகோகர்ணத்தில் உள்ள அன்னையின் குடைவரை கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது. அற்புத சிற்பங்களும்,பரிபூரண அருளும் நிறைந்திருக்கும் இந்த கோயிலுக்கு சென்று வழிபடாமல் அரச குடும்பத்தினர்கள் எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள் என வரலாறு சொல்கிறது.

ஒவ்வொரு போருக்கும் முன்பும் பூஜைகள் செய்து அன்னையின் ஆசியோடு வெற்றிகள் கண்ட அரசர்கள் திருவிழா எடுத்து கொண்டாடிய நிகழ்வுகளை இந்த கோயிலின் சரித்திரம் பறைசாட்டுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் அருள் மழை பொழிந்த அன்னையின் ஆற்றல் அளப்பரியது.அதை பற்றி சற்று காண்போம் நேயர்களே

இந்திரன் கொடுத்த சாபத்தினால் பூலோகத்திற்கு வந்தடைந்தது காமதேனு கபில் மற்றும் மங்கள மகரிஷியின் சொல்படி தினமும் கங்கையில் இருந்து நீர்கொண்டு வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ததாம். அப்போது புலி உருவத்தில் வந்த சிவபெருமான் காமதேனுவை சோதித்து பார்த்து பின்னர் அதற்கு சாபவிமோச்சனம் அளித்த திருத்தலம்தான் இது.

சிவபெருமானும் மங்களநாயகியாக அன்னை பிரகதாம்பாளும் பிரதான தெய்வங்களாக இருக்கின்ற நிலையில் மேல்தளத்தோடு கூடிய இடத்தில்.வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சரி, அரைக்காசு அம்மன் என்று இங்குள்ள அன்னையை அழைப்பது ஏன்?, அதில் தான் சுவாரஸ்யங்களும் அன்னையின் அருளின் வலிமையும் இருக்கிறது

ஒரு முறை புதுக்கோட்டையை ஆண்ட விஜய நகரப் பேரரசர் ஒரு முக்கிய ஆவணத்தை இழந்து வேதனை அடைந்துள்ளார். அதைக் கண்டு பிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவையாக போனது. பின்னர் அதை மீட்டெடுக்க பிரகதாம்பாள் அம்மனிடம் பிரார்த்தனை செய்தார். அம்மன் அவரது விருப்பத்தை நிறைவேற்றினார்,

காணாமல் போன ஆவணம் கிடைத்ததால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், அப்போது அவர் ராஜ்ஜியத்தில் வெளியிட்ட அரைக்காசு நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாளின் படத்தை பொறித்து, அந்த நாணயங்களை குடிமக்களுக்கு விநியோகம் செய்தார். அந்த நாணயம் வெளியிடப்பட்ட காலம் முதல் இன்றுவரை பக்தர்களால் அரைக்காசுஅம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

அந்த காலத்தில் இருந்தே புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொலைந்த மற்றும் தவறவிட்ட பொருட்களை மீட்டெடுக்க அரைக்காசு அம்மனிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

இழந்த பணத்தை மீட்டுத் தருதல் திருமணம், குழந்தைப் பிறப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடல் போன்ற பல விஷயங்களுக்காக மக்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டிசெல்கின்றனர். பலன் பெற்ற மக்களின் பிரார்த்தனைகளுக்கு அரைக்காசு அம்மன் அளித்த பதில்கள் பற்றிய பல நிகழ்வுகள் ஆலாயத்தில் பதிவாகியுள்ளன.

.இந்த அம்மனை வழிபட்டால், மறதியால் அல்லது தவறவிட்ட பொருட்களை கண்டுபிடிக்கலாம் அல்லது குடும்பத்தில் காணாமல் போனவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இழந்த பொருள் திரும்பக் கிடைத்தவுடன்,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக வெல்லத்தில் விநாயகரை உருவாக்கி, காய்ந்த இஞ்சி,வெல்லம் சேர்த்து பானகம் செய்து நிவேதனம் செய்வார்கள். மேலும் எலுமிச்சை மாலை அணிவித்து, அம்பிகா அஷ்டோத்திரம் கூறி வேண்டுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

நீங்கள் இழந்த பொருட்களை திரும்ப பெற, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ,கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட, திருமணத்தடை நீங்க இக்கோயிலுக்கு வருகை தாருங்கள். அம்மனின் அருளைப்பெறுங்கள்