உலகம்

பொருளாதார மந்தநிலை ஏற்படுமா? உலக வங்கி எச்சரிக்கை!

Malaimurasu Seithigal TV

2023ம் ஆண்டு உலக முழுவதும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவல் என்று கூறி உலக அளவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழில்கள் முடங்கியதோடு, பணவீக்கமும் அதிகரித்தது. இதனுடன் உக்ரைன்- ரஷ்யா போரும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. இதனிடையே பணவீக்கத்தை சரிசெய்ய போராடி வரும் உலக நாடுகள், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரியை அதிகரித்துள்ளன. இந்தநிலையில் பணவீக்கம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் கூடுதல் வட்டி விகிதத்தை அமல்படுத்தி வருவதாகவும்,

இதனால் அடுத்தாண்டு உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உலக வங்கி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பொருளாதார மந்தநிலை காரணமாக பங்கு சந்தைகளில் பெரும் நெருக்கடி சூழல் உருவாகும் என்றும்,வளரும் பொருளாதார நிலையை கொண்ட நாடுகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

வங்கிகளின் நடவடிக்கை

மத்திய வங்கிகளின் செயல்களால் மந்தநிலை ஏற்பட்டாலும், அதன் நடவடிக்கை பொருளாதார மீட்சிக்கு போதாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விநியோக இடையூறுகள் மற்றும் தொழில் சந்தைகளின் அழுத்தம் குறையாவிட்டால்,  இந்த வட்டி விகித உயர்வு சர்வதேச பணவீக்கத்தை மேலும் அதிகரிக்க கூடும் என்றும்,

அதாவது 2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பணவீக்கம் 5  சதவீதமாக உயரும் எனவும் எச்சரித்துள்ளது. இந்தநிலையில் மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, பங்குதாரர்கள் பலர் தங்களது பங்குகளை விற்பனை செய்ததால், கடைசி  நாளான நேற்று  வர்த்தகம் பெரும் சரிவுடன் நிறைவடைந்தது.