உலகம்

இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது நேரமில்லை-ஐக்கிய தேசியக் கட்சி!

Malaimurasu Seithigal TV

நாட்டில் எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும், இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல. தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டைச் சீர்குலைக்க விரும்புபவர்கள்.

தேசத்தைச் சீர்குலைக்க நினைக்கும் இந்தச் சக்திகள் விரைவில் ஓரங்கட்டப்படுவர். உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போது 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாகக் குறைப்பதும், ஆட்சியின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள விருப்பு வாக்கு முறையை இல்லாதொழிப்பதும் அவசியம். விவேகமுள்ள எவரும் இதை எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,நாட்டை மீண்டும் வலுப்படுத்திய பின் உடனடியாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர் தேர்தலை நடத்துவார். நாட்டுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தேவைப்படுவது தேர்தல் அல்ல. நாட்டை தேசிய வழியில் கொண்டு வருவதற்கான போராட்டமே தேவைப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோருவது நாட்டை மீண்டும் குப்பை கூடைக்குள் தள்ளும் நடவடிக்கையாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டாயம் தூக்கி நிறுத்துவார். சில மாதங்களுக்கு முன் அரசியல்வாதிகள் தேர்தலை கோரவில்லை ஓழிய இடங்களை தேடினர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் நாட்டை ஓரளவுக்கு வழமை நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.