உலகம்

இலங்கையில் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் - ராணுவம்!

கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களின் வன்முறை போராட்டத்தைக் கைவிட வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கோத்தபய ராஜபக்சே அவரது மனைவி உள்ளிட்டோர் இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்று, பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்றுள்ளதாக கூறப்பட்டது.

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அவர்களை பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அனுப்ப மாலத்தீவு அரசு ஒத்துழைப்பு அளித்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கோத்தாபயவும் அவரது குடும்பத்தினரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் சவூதி அரேபியாவிற்கு செல்ல இருப்பதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே இலங்கை அதிபரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தேசியக் கோடியை இறக்க முயன்றபோது காவல்த்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

வன்முறை நீடித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அமைதியை காக்க ராணுவத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டதால், கொழும்பு நகருக்கு ராணுவத்தினரும், ராணுவ வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வன்முறை போராட்டங்களை கைவிடும் படி ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை மக்கள் பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.