உக்ரைன் மீது தொடர்ந்து 17-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதோடு, பல்வேறு தடைகளையும் விதித்து வருகிறது.
அதன்படி அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடைய சேவையை நிறுத்தி உள்ளது. மேலும் பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன.
அந்த வகையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷியாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின், “இந்த பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷிய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதன் விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷிய பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்" என்று கூறியுள்ளார்.