உலகம்

ஜப்பானில் நடைபெற்று வரும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு.. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Suaif Arsath

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோட் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக குவாட் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின் அனைவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் முயற்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் குறுகிய காலத்தில் குவாட் கூட்டமைப்பு ஒரு வலுபெற்ற இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் பெருமை தெரிவித்தார்.

அஸ்திரேலிய பிரதமர் அல்பேனீஸ் பேசுகையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தால், ஆஸ்திரேலிய எல்லையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு குவாட் கூட்டமைப்பு துணையாக நிற்கும் எனவும் கூறினார்.

மாநாட்டில், பேசிய அமெரிக்கா அதிபர் ஜோபைடன், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்கா வலுவான, நிலையான மற்றும் நீடித்த கூட்டாளியாக இருக்கும் என்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சக்தியாக அமெரிக்கா விளங்கும் எனவும் உறுதியளித்தார். ரஷ்யா போரைத் தொடரும் வரை, சர்வதேச நாடுகளின் எதிர்வினையை அமெரிக்கா முன்னெடுத்துச் செல்லும் எனவும் கூறினார்.