பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் கலவரம் வெடித்துள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு தெஹ்ரக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊழல், பணமோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு இன்று இம்ரான்கான் வந்தார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த ரேஞ்சர்கள், இம்ரான்கானை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது வழக்கறிஞர் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் இம்ரான்கானை தாக்கி, கடத்திச்சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
இதைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அப்பகுதியில் கலவரம் வெடித்துள்ளது. சாலையில் டயர்களுக்கு தீ வைத்து ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான்கானை துன்புறுத்தவில்லை எனவும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.