உலகம்

”இந்தியா துணைநிற்கும்” உக்ரைன் அதிபரை முதன்முதலில் சந்தித்த பிரதமர் மோடி!

Tamil Selvi Selvakumar

உக்ரைன் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை முதன்முறையாக பிரதமர் மோடி, ஜி7 உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினார்.

ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடி, முன்னதாக மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் மாநாடு தொடங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்தபோது அவரை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ஜோபைடன், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜெர்மனி, தென்கொரியா, இந்தோனேஷியா நாடுகளின் அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மாநாடு நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், நமஸ்தே இந்தியா என இந்தியர்களை ஒரு ரோபோ வரவேற்றது அனைவரையும் ஈர்த்தது.

ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி முதன்முறையாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் போரை அரசியலாக மட்டும் கருதவில்லை எனவும், இதனை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும் எனவும் கூறினார். போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரதமர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.