அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நிறைவு நாளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் நிறுவன இயக்குநர்களுடன் கலந்துரையாடினார்.
வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் நேற்று வழங்கப்பட்ட மதிய விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியா - அமெரிக்கா நட்புறவால் ஏற்பட்ட சாதனைகளை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த பிரமாண்ட வரவேற்பிற்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய முடிவு செய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பிரதமர் மோடி, ஜோ பைடன் இருநாடுகளில் மேற்கொள்ள வேண்டிய தொழில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினர். இதில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அலுவலர் சத்யா நாதெல்லா, கூகுள் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். அப்போது செயற்கை நுண்ணறிவை குறித்து குறிப்பிட்ட சிறப்பு டி-சர்டை பிரதமருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார்.
இதையும் படிக்க:வேங்கை வயல் விவகாரம் "பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார் சிபிசிஐடி டிஎஸ்பி" !