ஆசியான், கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளை முடித்துக் கொண்டு, நாளைய ஜி20 மாநாட்டை முன்னிட்டு இந்தோனேசியாவில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
20வது ஆசியான் மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கும் வகையில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்கக் கூடியிருந்த இந்தோனேசியா வாழ் இந்தியர்களை சந்தித்து அவர் கைகொடுத்து மகிழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து ஆசியான் மாநாட்டில் அவர் பங்கேற்ற நிலையில், ஆசியான் தலைவர்கள் அனைவரும் மேடையில் ஒன்றாக உற்சாகத்துடன் கைகுலுக்கினர்.
இதையடுத்து மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளுக்காக இந்தியா வகுத்த கொள்கையின் மைய தூணாக ஆசியான் அமைப்பு உள்ளது எனவும் உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள திமோர்-லெஸ்டெயின் டில் பகுதியில் இந்தியத் தூதரகம் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார். இதனை திமோர்-லெஸ்டெ உள்ளிட்ட ஆசியான் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து ஜகார்த்தாவில் இருந்து திட்டமிட்டபடி டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். நாளைய ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.