உலகம்

பப்புவா நியூ கினியா ”தீவு அல்ல; மிகப்பெரிய கடல் நாடு” - இந்திய - பசிபிக் தீவுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

பப்புவா நியூ கினியா தீவு அல்ல மிகப்பெரிய கடல் நாடு என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தீவுகளுக்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறினார். 

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தின் அடுத்த கட்டமாக இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பப்புவா நியூ கினியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மார்பேவை பிரதமர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். உலகக் பொதுமறையாம் திருக்குறளின் புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பின்னர், பப்புவா நியூ கினியா ஆளுநர் ஜெனரல் பாப் டாடேவை போர்ட் மெரெஸ்பியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையிலான நல்லுறவு, வளர்ச்சி கூட்டாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.  

இதனைத் தொடர்ந்து, இந்திய - பசிபிக் தீவுகளின் 14-வது ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா தீவு அல்ல மிகப்பெரிய கடல் நாடு என பெருமிதம் தெரிவித்தார். பப்புவா நியூ கினியாவுடன் நட்பு பாராட்டுவதில் இந்தியா பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், சுதந்திரமான வெளிப்படை தன்மை கொண்ட இந்திய  - பசுபிக் உறவை கட்டமைப்பதாகவும் தெரிவித்தார். 

இதேபோல், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மார்பே நெகிழ்ச்சி தெரிவித்தார். ஜி 20 மாநாட்டை நடத்தும் இந்தியா உலக அளவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக கூறினார்.