இந்திய நாட்டின் கூட்டாண்மை உலக நன்மைக்கான சக்தி என பிரதமா் மோடி தொிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தின விழாவான 'பாஸ்டில் தினம்' கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக இந்தியாவிலிருந்து பிரான்ஸ் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற அணி வகுப்பின்போது, அந்நாட்டு ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, இந்தியக் குழுவினர் 'சாரே ஜஹான் சே அச்சா' என வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.
அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், பிரான்ஸ் மக்களுடன் பாஸ்டில் தினத்தை கொண்டாடியது மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்துள்ளதாக தொிவித்தாா். மேலும், "பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எனக்கு 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்' விருதை வழங்கினார். இது 140 கோடி இந்திய மக்களுக்கு பெருமையும், கவுரவமும் ஆகும் எனவும், இந்த கவுரவத்திற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆகியோருக்கு நன்றி தொிவித்து கொள்வதாக தொிவித்தாா்.
தொடா்ந்து பேசிய பிரதமா், கடந்த 25 ஆண்டுகளில் உலகம் பல ஏற்ற தாழ்வுகளையும், சவாலான காலங்களையும் சந்தித்ததாகவும், ஆனால் பிரான்சுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்பு ஆழமாக வளர்ந்ததாகவும் குறிப்பிட்டாா். மேலும் இரு நாடுகளின் நலனுக்காக மட்டுமின்றி, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் இந்தியா பங்களித்து வருவதாகவும், இந்தியாவின் கூட்டாண்மை உலக நன்மைக்கான சக்தி எனவும் அவா் தொிவித்தாா்.
இரண்டு நாட்கள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். அங்கு அவா் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா்.
இதையும் படிக்க:ஆதி திராவிடர் மாணவர் நல விடுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் ..!