சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை முதலமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது பேசிய சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு விமான நிலையம் திரும்பும் வழியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள முருகன் இட்லி கடையில் தேனீர் அருந்தி தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
முன்னதாக, முதலமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் பதவில் தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனை சந்தித்ததாகவும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழும் தமிழர் நலமும் காக்கும் திமுக அரசின் பணிகளை அவர் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:புகார் எழாத வகையில் மின் கணக்கீடு செய்ய உத்தரவு!