சென்னை-பிராங்க்பார்ட் இடையே 3 ஆண்டுகளுக்கு பின் தினசரி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகருக்கு லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் தற்போது வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் அதிகமாக இருக்கிறது. சென்னை- ஃபிராங்பார்ட் இடையான விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும் லண்டன், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ, பாரிஸ், ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த விமானத்தை இணைப்பு விமானமாக பயன்படுத்துவதால் விமானத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது.
கொரோனா வைரஸ் தாக்குதல் ஊரடங்கு காலத்திற்கு பின் தினசரி விமான சேவை நிறுத்தப்பட்டன. இதையடுத்து தினசரி விமானமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று இன்று முதல் சென்னை-ஃபிராங்பார்ட் இடையே தினசரி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து புறப்படும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதே விமானம் மீண்டும் அதிகாலை 1:50 மணிக்கு சென்னையில் இருந்து ஃபிராங்க்பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்கிறது.
3 ஆண்டுகளுக்கு பின் பிராங்க்பார்ட் நகருக்கு தினசரி விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
இதையும் படிக்க || "மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க" வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!