தமிழ்நாடு

IFS நிதி நிறுவன மோசடியால் தொடரும் தற்கொலைகள்.....! மீண்டும் ஒரு உயிர்..!

பணத்தை மீட்டு ஏமாந்தவர்களுக்கு திருப்பி தாருங்கள்... கடிதத்தில் உருக்கம்...

Malaimurasu Seithigal TV

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த காந்தி நகர் கல்லூரி பகுதியைச் சேர்ந்த பிரசாத் (வயது 28). இவர், ஐ.எப்.எஸ்.தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதால் அதனை நம்பி சுமார் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதில், தன்னுடைய சொந்த பணம் 15 இலட்சம் மற்றும் மற்றவர்களிடம் 13 இலட்சம் தொகையை  ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் எஜன்ட்டாக செயல்பட்டு  வந்த காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய கரும்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்  கொடுத்துள்ளார்.  
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வெங்கடேசனை காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த தகவலை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போதிலிருந்தே மிகவும் மன உளைச்சலுடன் தனது பணம் இனி திரும்ப வரவே வராது எனக் கவலையுடன்  இருந்துள்ளார்.

மேலும் இவர் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி அக்கம் பக்கத்தில் பணம் வாங்கியும் உறவினரிடம் பணம் வாங்கியும் அந்த நிறுவனத்தில் 28 லட்சம் ரூபாய்  வரை முதலீடு செய்துள்ள நிலையில் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற அச்சத்தின் காரணமாக   இன்று விடியற்காலை தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் வம்சி கிருஷ்ணா என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது உடலைக் கைப்பற்றிய குடியாத்தம் நகர காவல் துறையினர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முதன் முதலில் ஏமாற்றப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொண்டவர் - காட்பாடி வினோத்.   அவரை அடுத்து தற்போது பிரசாத். இப்படி, மேலும் மேலும் தற்கொலைகள் நீளாதவாறு தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசும் உடனடியாக தலைமறைவாக உள்ள ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தினரை மக்களிடம்  ஏமாற்றிய பணத்துடன் கைது செய்து மக்கள் முன்னிலையிலும் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக  உள்ளது.