தமிழ்நாடு

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இளைஞர்கள்... தென்காசியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு...

ஆலங்குளம் அருகே ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு போஸ்டர்களை ஒட்டி எச்சரிக்கை விடுத்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் பரபரப்பு.

Malaimurasu Seithigal TV

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மாறாந்தை ஊராட்சியில் ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் வால் போஸ்டர்களை அடித்து மாறாந்தை பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் ஊராட்சி பதவிகளில் போட்டியிடும் நபர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என்றும் கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு, செலவு கணக்கு கேட்டு அறியப்படும் அப்படி அறியப்பட்டாலும் அவை உண்மையா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கும் செயலிலும் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஊழல் நடைபெற்று கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவரின் பெயர், பதவி, புகைப்படம் போன்றவற்றை வலைதளங்கள் மூலமும் சி.எம் செல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கும் மாறாந்தை ஊராட்சி இளைஞர்கள், ஊர் பொதுமக்களால் பகிரப்படும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்களும் இதேபோன்று சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தனர்.

ஆலங்குளம் பகுதிகளை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளுக்கு ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அனைவரும் இதுபோன்ற செயல்களால் பெரும் அச்சத்துடனேயே தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.