பணியில் சேரும்போது எந்த அளவுக்கு நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பதுபோன்று, 35 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறும் போதும் அதே அளவு நேர்மையுடன் விடைபெற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தமிழக காவல் துறை இயக்குனர் சி. சைலேந்தரபாபு ஐபிஎஸ் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தான் கோபி காவல் நிலையத்தில் பணி புரிந்த காலத்தில் தன்னுடன் பணியாற்றிய காவலர்களுடன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முன்னதாக காவல் நிலையத்தில் சிறப்பாக பணி செய்த எழுத்தருக்கு சிறப்பு பரிசினை வழங்கினார்.
அதனை தொடர்ந்து கோபி கலை அறிவியியல் கல்லூரியில் தன்னார்வ சங்கங்கள் சார்பில் 'நான் முதல்வன் ' என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக காவல் துறை இயக்குனர் சி. சைலேந்தரபாபு மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசுஅரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரியிலிருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை இயக்குனர் சி. சைலேந்தரபாபு பேசியதாவது:-
கோபி காவல் நிலையம் தான் எனது முதல் காவல் நிலையம். 1989-ம் ஆண்டு இந்த காவல் நிலையத்தில் தான் எனது முதல் பணி ஆரம்பித்தது. கோபிசெட்டிபாளையம் என்பது கோபி மட்டுமின்றி சத்தியமங்கலம் உட்கோட்டத்தை உள்ளடக்கிய ஒரு பகுதியாக அந்த காலகட்டத்தில் இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் வீரப்பன் தான் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்பது யானைகளை வேட்டையாடாவது பல வன அதிகாரிகளை கொலை செய்வது போன்ற நிகழ்ச்சி நடந்த போது தான் இங்கு பணியை தொடங்கினேன். வீரப்பனுடன் நான்கு முறை துப்பாக்கி சண்டை நடத்தி உள்ளேன். வீரப்பன் கும்பலை சேர்ந்த பலரை கைது செய்துள்ளோம். அப்போது மிகப்பெரிய சவாலான உட்கோட்டமாக இருந்த நிலையில் இன்று மிக அமைதியாக உள்ளது. இந்த காவல் நிலையத்தில் வழக்குகள் உடனுக்குடன் பதிவு செய்து தீர்வும் காணப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்ட போது சாதாரண வழக்குகளை கூட பதிவு செய்து உள்ளனர். காவல் நிலையத்தில் வருபவர்களை வரவேற்பதற்காக முதலமைச்சர் காவல் நிலையத்தில் வரவேற்பு அதிகாரி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிய போது உயர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இந்த வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலரும் பட்டதாரிகளாக உள்ளனர். காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம்பரிவோடு பேசி அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்து காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டு புகார்தாரரின் நோக்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உதவியாக உள்ளது.
முன்பு எல்லாம் புகார் அளிக்க காவல் நிலையம் வரும்போது பல்வேறு பணிகளுக்காக காவல்துறையினர் சென்று இருப்பர். புகார்தாரரை வரவேற்க கூட ஆள் இருக்காது. எனது காவல்துறை பணியில் கோபி காவல் நிலையத்தில் பணிபுரிவதே ஒரு சவாலான பணியாகும். வீரப்பனுடன் துப்பாக்கி சூடு போன்றவை பரபரப்பான வழக்குகள். அன்றைய காலகட்டங்களில் ஒவ்வொரு ஊரிலேயும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பனை மிகப்பெரிய அளவில் நடக்கும்.அதை கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. அது தொடர்பாகவே காவல்துறையின் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆயிரம் மைல் பயணம் என்பது ஒரு காலடியில் தான் தொடங்கும் என்பார்கள். எனது பணியை நான் முதலில் தொடங்கிய இடம் இது என்பதால் மனதுக்கு நெருக்கமாக உள்ளது.
பணியை நிறைவு பெறக்கூடிய சூழ்நிலையில் அதிகாரிகளுக்கு நான் கூறுவது பணியில் சேரும்போது எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு நியாயமான உணர்வுகளோடு நேர்மையான மனதோடு இருந்தோமே அதே போன்று 35 ஆண்டுகளுக்கு பிறகு பணி ஓய்வு பெறும் போதும் அதே அளவு நேர்மையுடன் ஓய்வு பெற்றால் அதுவே மிகப்பெரிய சாதனை. இதை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.நாம் பணியில் சேர்ந்த போது அணிந்து உள்ள பெல்ட் என்ன அளவு இருந்ததோ நாம் பணி ஓய்வு பெறும் போதும் அதே அளவு இருந்தால் அதுவே ஒரு பெரிய சாதனை", என்றார்.
இதையும் படிக்க | ”பாலன் தன் அம்மா பெயரையும் சேர்ந்து கொண்டு வசந்தா பாலனாவேன்”- இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு!