தமிழ்நாடு

சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்..  போர்க்கால அடிப்படையில் பணிகள்  - சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதை தவிர்க்க, சென்னை காவல்துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

குடிமராமத்து பணிகளால் மக்கள் சிரமம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமராமத்து பணிகளால் வாகனங்கள் செல்லும் வழிகள் குறுகி, சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சென்னை காவல் ஆணையர் மூலம் நெடுஞ்சாலைத்துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் இன்று சிறப்பு ஆலோசானைக் கூட்டம் நடத்தப்பட்டு  பொதுமக்களின் சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

பட்டியலிடப்பட்ட பணிகளுக்கு முன்னுரிமை

பொதுமக்களின் சிரமங்களை கூடிய விரைவில் போக்கும் வகையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக பணிகளுக்கான அனுமதிகளை சென்னை காவல்துறையினர் விரைந்து அளிக்கவும், தற்போது நடைபெற்று வரும் பணிகளில் எவையெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனப் பட்டியலிட்டு அப்பணிகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பணிகள் முடிந்த மற்றும் நிலுவையில் உள்ள இடங்களில், பணிகள் நிறைவடைந்தவுடன் சாலைகளை முன்பு இருந்ததைப்போல் தரமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மழைநீர் வடிகால், விடுபட்ட இணைப்பு தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். மற்றும் ஒற்றை சாளர அமைப்பை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரம்

மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட துறைகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ரெடி-மிக்ஸ் கான்கிரீட் கலவை வாகனங்களை பகல் நேரங்களிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் நகர சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.