தமிழ்நாடு

உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்!

Malaimurasu Seithigal TV

கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தரப்பில் வாக்குறுதி அளித்தபடி செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த நிலையில், உரிமைத் தொகை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர். 

அதன்படி விண்ணப்பங்களை பதிவு செய்தல்,  அவற்றைப் பதிவேற்றம் செய்தல், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன.

இதில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் செயல்படும் முகாம்களில் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய முறையில் பதிவேற்றம் செய்ய மகளிருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.