தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் உரிமைத் தொகை திட்டம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் விண்ணப்பப் பதிவு முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏழை எளிய மகளிரைக் கொண்டு செயல்படும் மகளிர் சுய உதவிக் குழு என்ற மாபெரும் அமைப்பை தருமபுரியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கியதாகவும், அந்த திட்டம் தற்போது லட்சக்கணக்கான மகளிரின் வாழ்வில் ஒளியேற்றி வருவதாகவும் கூறினார்.
அதேபோல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தருமபுரியில் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, தருமபுரியில் விதைத்தால் அது தமிழ்நாடு முழுவதும் முளைக்கும் என்பதால் இங்கு தொடங்கி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டுவர உழைத்து வருவதாக கூறிய முதலமைச்சர், தான் முதலமைச்சராக ஆனவுடன் முதல் கையெழுத்து போட்ட மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மூலம் நாள்தோறும் 36 லட்சம் பெண்கள் பயனடைந்து
வருவதாகவும் கூறினார்.
காலை உணவுத் திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், புதுமைப் பெண் திட்டம் மூலம் அரசுப் பள்ளியில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகவும் கூறினார்.