தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?!!

Malaimurasu Seithigal TV

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விசாரணை:

வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

யானைக்கூட்டத்துடன் சேர்க்க:

அப்போது தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானதை அடுத்து உயிர் தப்பிய இரு குட்டி யானைகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, இரு குட்டி யானைகளையும் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் அவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை என மனுதாரர்கள் முரளிதரன் மற்றும் சொக்கலிங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

விளக்கம்:

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ரவீந்திரன், தற்போது இரு யானை குட்டிகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

உத்தரவு:

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். பின்னர், மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.