தமிழ்நாடு

எதற்கு இத்தனை பெருமை பேச்சு... ஐஸ் வைக்க முயல்கிறாரா ஆளுநர் ரவி!!

Malaimurasu Seithigal TV

தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த அம்மாநில முதலமைச்சர்களோடு பேசி வருவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா:

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்:

மாற்றம் தேவை:

புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது என்றும் திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும் எனவும் அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.  மேலும், கல்வி கற்பிக்கும் முறை மாறி வருகிறது எனவும் பழமையான கல்வி கற்பிக்கும் முறை போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் என்பவர்கள் ஆலமர விதை போன்றவர்கள் எனவும் அதை கண்டறிந்து பெரிய மரமாக வளர ஆசிரியர்கள் உதவிட வேண்டும் எனவும் பேசினார்.

தாய்மொழி அறிவு:

தாய்மொழியில்தான் அறிவை வளர்க்க முடியும் என்று குறிப்பிட்ட ஆளுநர் திருக்குறள் அனைத்து மாநிலங்களிலும் பாடத்திட்டத்தில்  வைக்கப்பட  வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் பெருமை:

நாட்டின் வளர்சியில் தமிழ்நாட்டின் பங்கு இன்றியமையாததது எனக்கூறிய ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை நாடு நீண்ட காலமாக அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.  இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்ட பெருமை தமிழகத்தை பெரிதும் சாரும் என தெரிவித்தார். 

வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2-வது மொழியாக கொண்டு வர அம்மாநில  முதலமைச்சர்களிடம் பேசியுள்ளதாகவும், அதே போல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு 13 இந்திய மொழியில் திருக்குறளை வெளியிட்டார் எனவும் தெரிவித்தார்.

விமர்சனம்:

திடீரென ஆளுநருக்கு ஏன் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மீதும் இத்தனை பாசம் எனவும் இவ்வளவு நாளாக இது எதுவும் அவருக்கு தெரியவில்லையா என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

-நப்பசலையார்