தமிழ்நாடு

சென்னையில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? விளக்கமளித்த தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்!

Tamil Selvi Selvakumar

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு பொழிந்துள்ளதாகவும், கடந்த 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில் ஒரு மாவட்டத்தில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிக அளவிலும், ஆறு மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பு விட மிகக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சென்னையில் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அக்டோபர் மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இல்லை என்றும், மேகமூட்டம் இருக்கும்போது பனிமூட்டம் இருக்காது என்றும், காற்றிலும் மண்ணிலும் ஈரப்பதம் இருப்பதாலும், வாகனங்களின் புகை போன்றவற்றால் பனிமூட்டம் சூழல் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.