அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதறுவது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல் என்று நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள காணொலியில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். பலமுறை சம்மன் அனுப்பிய பிறகும் நேரில் ஆஜர் ஆகாததால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசும் முதலமைச்சர், பதற்றத்தில் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், மக்களை பற்றி சிந்திக்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து மட்டுமே முதலமைச்சர் சிந்தித்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட தகவலால் அச்சம் அடைந்துள்ள முதலமைச்சர், ஏதேனும் சொல்லி விடுவாரோ என்ற பதற்றம் காரணமாகவே அவரை நேரில் சென்று பார்த்ததாக கூறினார். அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தனது அரசியல் வாழ்க்கை சூனியமாகி விடும் என முதலமைச்சர் பயப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.
இதையும் படிக்க : வெள்ளித்திரையில் கால் பதிக்கும் டிஜிட்டல் ஊடக பிரபலங்கள்...அறிமுகம் செய்து வைத்த திரையுலக பிரபலங்கள்!
தமிழ்நாட்டில் சுமார் 3 ஆயிரத்து 500 பார்கள் எந்த விதமான டெண்டரும் விடப்படாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிடட அவர், இதில் வரும் அனைத்து வருமானமும் முதலமைச்சரின் குடும்பத்திற்கு செல்வதாக குற்றச்சாட்டினார். திமுகவின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டதாகவும் எடப்பாடி சாடினார்.
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், 2 ஆண்டுகளில் சுமார் பல ஆயிரம் கோடிக்கு மேலாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தார். டெண்டர் முறைகேடு தொடர்பாக தன்மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதுபோன்று முதலமைச்சருக்கு திராணி இருந்தால் செந்தில் பாலாஜி வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க வேண்டும் என்றார். மேலும் அதிமுகவை சீண்டினால் காணாமல் போய்விடுவீர்கள் என முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.