தமிழ்நாடு

நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு காட்டுவது ஏன்? கேள்வி எழுப்பிய வேல்முருகன்!

Tamil Selvi Selvakumar

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் தமிழ்நாடு அரசு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏன் 5 லட்சம் வழங்கக் கூடாது? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். 

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகே தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் கடலூர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் விபத்தில் படுகாயம் அடைந்து  கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியவர், கள்ளச்சாராயம், விஷசாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்படும் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் தமிழக அரசு, ஆற்றில் மற்றும் விபத்தில் உயிரிழந்தால் பாகுபாடு காட்டி ஒரு லட்சம், இரண்டு லட்சம் என வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இனி வரும் காலங்களில் எந்த பாகுபாடும் இல்லாமல் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.