தமிழ்நாடு

ஆட்சியில் யாரை அமர வைப்பது....? கட்சித் தலைமை தீவிர ஆலோசனை..!

பிரியங்காவின் அழைப்பை ஏற்று டி.கே.சிவகுமார் இன்று டெல்லி பயணம்...!

Malaimurasu Seithigal TV

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே 10-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்தலில்  பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில், புதிய முதலமைச்சரை தேர்வு தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு அளிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பை கட்சித் தலைமை இன்று அறிவிக்க உள்ளது.

முதலமைச்சர் தேர்வில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சித் தலைமையின் அழைப்பை ஏற்று சித்தராமையா நேற்று டெல்லி சென்ற நிலையில், உடல் நலக்குறைவால் நேற்றைய பயணத்தை தவிர்த்த டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். 

சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால் டெல்லி பயணத்தை டி.கே.சிவக்குமார் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இருவரும் முதலமைச்சர் பதவி தங்களுக்கே வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதால் ஆட்சியில் யாரை அமர வைப்பது என கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால், முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் இதுவரை இழுபறி நீடித்து வருகிறது.

இருப்பினும், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 18-ம் தேதி நடத்தவும், அதனைத் தொடர்ந்து அமைச்சரவை குறித்து முடிவு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் அழைப்பை ஏற்று டி.கே.சிவக்குமார் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.