தமிழ்நாடு

பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலின் பதில்!

Malaimurasu Seithigal TV

பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பிகாரில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர்களின் ஒன்றினைந்த ஆலோசனை கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கலந்து கொண்ட பின் பீகாரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசியவர், "இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பீகாரின் தலைநகரமான பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும், டி ஆர் பாலு சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாக்குவதாக இந்த கூட்டம் அமைந்திருந்ததாக கூறினார். மேலும், பீகாரில் அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் நான் சந்தித்தேன். குறிப்பாக நேற்று மாலை பாட்னா சென்றவுடன் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லல்லு பிரசாத் யாதவை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன் அது எனக்கு உற்சாகத்தை தந்தது" எனக் கூறினார்.

மேலும், "ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த கூட்டத்தை பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் நடத்தினார். இந்த கூட்டம் என்பது பாஜக என்ற தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரானதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, பன்முக தன்மையை, மதச்சார்பின்மை, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம்.  இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பது நான் இன்று காலையில் பேசும்போது நான் தெளிவாக கூறியது" என தெரிவித்தார்.

மேலும், இந்த ஜூன் 23ஆம் தேதி கூடினார்கள் அடுத்த 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமே தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தான் அழுத்தம் திருத்தமாக பேசிதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதேபோல அகில இந்திய அளவிலும் இந்த ஒற்றுமை தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினேன். சில முக்கியமான ஆலோசனைகளை கூட்டத்தில் வழங்கி இருக்கிறேன். உதாரணமாக 'எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்று சொன்னால் தொகுதி பங்கீடுகள் மட்டுமாவது செய்து கொள்ளலாம், அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்' என்பது சரியான நிலைபாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் ஒதுக்கப்பட வேண்டும்.  இதுபோன்ற ஏழு பிரச்சனைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்" என்று வரிசையாக தான் கூட்டத்தில் கூறி இருப்பதாக தெரிவித்தார். 


மேலும், பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள் பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டிருக்கிறது ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். இப்போதுதான் கருவாகி இருக்கிறது அது உருவாக சில மாதங்கள் ஆகலாம் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பின்னர் உங்களுக்கு தெரிவிக்கிறோம் பாட்னாவில் கூடினோம் மகிழ்ச்சியாக திரும்பி இருக்கிறோம் என கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நன்றி சொல்லி முடியும் வரை அந்த கூட்டத்தில் நான் இருந்தேன். அதற்கு பிறகு விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டது. மதிய உணவுக்கு பிறகு தான் செய்தியாளர் சந்திப்பு இருந்தது. மதிய உணவு கூட சாப்பிட முடியாமல் விமானத்திற்காக வந்து விட்டேன். நான்  மதிய உணவு கூட விமானத்தில் தான் சாப்பிட்டேன். வேறு எந்த உள்நோக்கத்திற்காகவும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வரவில்லை என்றார். 

முதல் கூட்டத்தில் கூடினோம், என்ன செய்வது என்று முடிவெடுத்தோம், அடுத்த கூட்டத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை போகப் போக தெரிவிக்கப்படும் என தெரிவித்த அவர், பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லாம் ஆர்வமாக இருப்பதை பார்த்தால் யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாக தெரிகிறது என தெரிவித்தார்.